தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்க டிபிஐ முற்றுகை: 200 பேர் கைது
சென்னை: கல்வியை வியாபாரமாக்கும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்கக் கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் டிபிஐ வளாகத்தில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முற்றுகை போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.ஷரீப் தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது: டாஸ்மாக் கடைகளை அரசு ஏற்று நடத்தும் நிலையில் பள்ளிகளை தனியார் நடத்தும் நிலை ஏற்பட்டுவிட்டது. 1000 அரசுப் பள்ளிகள் சப்தம் இல்லாமல் மூடப்பட்டுவிட்டுவிட்டன. இன்று 5 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் பொறியியல் கல்லூரியில் சேர முடியும் என்ற நிலை உள்ளது. அதனால் அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும், கல்லூரிகளை தனியார் மயமாக்க வேண்டும் என்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கோரிக்கை வைத்து இந்த போராட்டம் நடத்துவதை நாங்கள் வரவேற்கிறோம் வாழ்த்துகிறோம். இவ்வாறு ராமகிருஷ்ணன் பேசினார். இந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்று கோஷம் போட்ட 200க்கும் மேற்பட்டவர்களை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.