வேலூர்: கணவன், மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த மர்ம நபர்கள் 150 சவரன் நகை, ரூ.10 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டு கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் இபி காலனி பாரதிதாசன் 2வது தெருவை சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ(70). இவரது மனைவி ரோஸ்மேரி. இவர்களுக்கு சந்திரா, பிரபா என்ற 2 மகள்களும் ரூபன் என்ற மகனும் உள்ளனர். மகன், மகள்கள் திருமணமாகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதனால் ஜான்பிரிட்டோ தனது மனைவியுடன் கழிஞ்சூரில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.கடந்த 13ம்தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தம்பதியினர் நடமாட்டம் இருந்துள்ளது. அதன்பிறகு இவர்கள் வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில் சென்னையில் உள்ள மகன் ரூபன், செல்போனில் தனது தந்தையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது சுவிட்ச் ஆப் என வந்ததாம். இதனால் அவர் ராணிப்பேட்டையில் உள்ள நண்பர் ஜெய்சங்கர் என்பவருக்கு போன் செய்து, ‘எனது தந்தைக்கு போன் செய்தால் சுவிட்ச் ஆப் என வருகிறது. எனவே வீட்டில் போய் பாருங்கள் என தெரிவித்துள்ளார். இதையடுத்து ஜெய்சங்கர் இன்று காலை ஜான்பிரிட்டோ வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வெளியே கதவு பூட்டப்பட்டிருந்தது. இதனால் ஜெய்சங்கர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் ஜான்பிரிட்டோ குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் கடந்த 2 நாட்களாக ஜான்பிரிட்டோ தம்பதியினர் வெளியே வரவில்லை என தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து உடனடியாக விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் டிஎஸ்பி மதிவாணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் ஜான் பிரிட்டோவும், அவரது மனைவி ரோஸ்மேரியும் சடலமாக கிடந்தது தெரியவந்தது. அவர்கள் உடல் முழுவதும் ரத்தக்கறை இருந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ‘கணவன்-மனைவி இருவரையும் மர்மநபர்கள் யாரோ கழுத்தறுத்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க தம்பதி போராடியுள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு நடந்திருக்கலாம். இந்த வீட்டில் இருந்து 150 பவுன் நகைகள், ரூ.10 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி விசாரிக்கப்படும்‘ என்றனர்.