வெடிபொருள் பதுக்கிய 2 பேர் பிடிபட்டனர்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூரில் சின்னவண்டிக்காரர் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள ஒரு குடோனில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, கிடைத்த தகவலின் பேரில் கோவை மாவட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார், வால்பாறை டிஎஸ்பி.,சக்திவேல் மற்றும் கோட்டூர் போலீசார் அங்கு சென்று சோதனை போட்டனர். அப்போது அந்த குடோனில் 320 ஜெலட்டின் குச்சிகள், 160 டெட்டனேட்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் வெடிபொருட்களை பதுக்கி வைத்தது தொண்டாமுத்தூரைச் சேர்ந்த முத்துக்குமார்(30), கரட்டூர் ராவணாபுரத்தைச் சேர்ந்த குமார்(29) என்பது தெரியவந்தது.
அப்போது, வெடிபொருட்களை எடுத்துச் செல்வதற்காக பைக்கில் வந்த முத்துக்குமார், குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.இருவரிடமும் நடத்திய விசாரணையில், உடுமலையில் உள்ள ஒரு தனியார் குடோனில் இருந்து, வெடிபொருட்கள் கொண்டு வந்ததும், அவற்றை வேறு ஒரு பகுதியில் கிணறு தோண்ட பயன்படுத்த வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கோட்டூர் போலீசார், உடுமலையில் உள்ள தனியார் குடோன் உரிமையாளர் செல்வராஜிடம் விசாரித்து வருகின்றனர்.