இளம்பெண்ணிடம் தவறாக நடந்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி: ஆவடி டேங்க் பேக்டரியில் பரபரப்பு
ஆவடி: பெண்ணிடம் சில்மிஷம் செய்துவிட்டு பைக்கில் தப்ப முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.ஆவடி டேங்க் பேக்டரி பகுதியில் நடந்து செல்லும் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்ளும் பைக் கும்பல் ஒன்று சுற்றிவந்தது. பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்பேரில் அவர்களை போலீசார் தேடி வந்தனர். டேங்க் பேக்டரி குடியிருப்பில் வசித்து வரும் ராணுவ ஊழியர் பாஸ்கரன் என்பவரின் மனைவி ஜெயந்தி (30). நேற்று மாலை தன் வீட்டுவாசலில் நின்றிருந்தார். அப்போது வேகமாக பைக்கில் வந்த வாலிபர், ஜெயந்தியிடம் சில்மிஷம் செய்துவிட்டு வேகமாக பைக்கில் பறந்தார்.
ஜெயந்தி போட்ட சத்தம் கேட்டு மக்கள் திரண்டனர். பைக்கில் வேகமாக சென்ற வாலிபரை சுற்றிவளைத்து பிடித்தனர். பின் அந்த நபரை தெருவில் ஓடவிட்டு சரமாரியாக அடித்து உதைத்தனர். வலி தாங்க முடியாமல் தவித்த வாலிபர், விட்டு விடுங்கள் என்று கையெடுத்து கும்பிட்டு கதறியுள்ளார். இதன்பிறகு அந்த வாலிபரை ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் ஒப்படைத்தனர்.போலீசார் விசாரணை நடத்தினர். மக்களிடம் சிக்கிய வாலிபர் ஆவடி பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த ஆண்டனி (26). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள கம்பெனியில் வேலை செய்கிறார் என்று தெரிந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.