கருணாநிதி அறக்கட்டளை: சார்பில் 13 பேருக்கு நிதியுதவி
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், 13 பேருக்கு தலா 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் இன்று வழங்கப்பட்டது.திமுக தலைவர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஏழை, எளிய நலிந்தோருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2005 நவம்பர் முதல் இதுவரை இந்த அறக்கட்டளை சார்பில், ரூ.3 கோடியே 23 லட்சத்து 40 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வருடத்துக்கான மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 13 பேருக்கு, தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் இன்று வழங்கப்பட்டது. நிதி பெறுவோர், வெளி மாவட்டங்களில் இருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக நிதி அனுப்பப்பட்டது.