சென்னை: ரஜினி, கமல், விஜய், அஜீத் ஆகிய டாப் ஹீரோக்களுக்கு இந்த ஆண்டு டபுள் படங்கள் ரிலீஸ் ஆகிறது.முன்னணி ஹீரோக்கள் ரஜினி, கமல் ஆகியோர் நடிக்கும் படங்கள் ஒன்றுக்கொன்று ரிலீஸ் ஆவதில் வருட கணக்கில் இடைவெளி இருக்கும். ஆனால் 2014ம் ஆண்டு இனிப்பான ஆண்டாகவே அமைந்திருக்கிறது. ரஜினி நடித்த ‘கோச்சடையான் கடந்த மே மாதம் ரிலீஸ் ஆனது. இதையடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ‘லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல் நடித்துள்ள ‘விஸ்வரூபம் 2 பணிகள் நிறைவடைந்து விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதற்கிடையில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ‘உத்தமவில்லன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இப்படமும் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகிறது. நடிகர் விஜய்க்கு கடந்த பொங்கல் தினத்தில் ‘ஜில்லா திரைக்கு வந்தது. இதையடுத்து ‘கத்தி படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படம் வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரவுள்ளது. இதில் ஒற்றுமை என்னவென்றால் ‘லிங்கா, ‘உத்தமவில்லன், ‘கத்தி என 3 படங்களிலும் முறையே ரஜினி, கமல், விஜய் ஆகியோர் இருவேடத்தில் நடிக்கின்றனர். கடந்த பொங்கல் தினத்தையொட்டி அஜீத் நடித்த ‘வீரம் திரைக்கு வந்தது. இதையடுத்து கவுதம் மேனன் இயக்கும் ‘தலை 55 படத்தில் நடித்து வருகிறார். வரும் நவம்பர் மாதம் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் 25 வயது வாலிபன், பெப்பர் சால்ட் தோற்றம் என இருவித கெட்டப்பில் நடிக்கிறார்.