சீனாவில் மழை வெள்ளம் : 2 கிராமங்கள் மூழ்கின
பீஜிங்:சீனாவின் தென்மேற்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 25 பேரை காணவில்லை.சீனாவின் தென்மேற்கே யுனான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், இந்த மாகாணத்தில் நுஜியாங் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. பல கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. யுன்லாங் கவுன்டியில் உள்ள மின்சூ கிராமத்தில் நேற்று அதிகாலை 2 மணிக்கு மழை வெள்ளம் சூழ்ந்தது. மேலும், பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பியுகோங் கவுன்டியில் உள்ள ஷாவா கிராமத்திலும் நேற்று அதிகாலை 3 மணிக்கு வெள்ளம் சூழ்ந்தது. இப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் இடிந்தன. இதில் 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும், நுஜியாங் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 பேரை தேடும் பணி நடைபெறுகிறது. யுனான் பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் சுமார் 150 பேர் கொண்ட மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.வெள்ளம் பாதித்த பகுதிகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் லீ ஹாங்வான் பார்வையிட்டார். பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் பணிகளை ஆய்வு செய்தார்.