டல்லாஸ்:மெக்சிகோ வழியாக எல்லை தாண்டி அமெரிக்காவுக்குள் சிறுவர்கள் ஊடுருவும் விவகாரம் தொடர்பாக மத்திய அமெரிக்க நாடுகளின் பெற்றோர்களுக்கு அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்காவின் அண்டை நாடுகளான மெக்சிகோ உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து ஏராளமான சிறுவர்கள் பெற்றோர்களால் கைவிடப்பட்டு எல்லை தாண்டி அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர். இதனை தடுக்க அமெரிக்கா திணறி வருகிறது. பெரும்பாலும் 14 வயதிற்கும் குறைவான சிறுவர்கள் என்பதால், அவர்களை சட்ட ரீதியாக கடுமையாக தண்டிக்க இயலாத நிலை உள்ளது. குடியேற்ற துறை அதிகாரிகள் அவர்களை கண்டறிந்து சிறுவர்கள் இல்லத்தில் தங்க வைத்து பெற்றோர்களை கண்டறிந்து ஒப்படைக்கும் சவாலான பணியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசு குடியேற்றத் துறையில் கண்காணிப்பு பணிகளை மேம்படுத்த 3.7 பில்லியன் டாலர் நிதி ஒதுக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், சிறுவர்கள் ஊடுருவல் விவகாரம் தொடர்பாக டல்லாஸ், டெக்சாஸ் மாகாண கவர்னர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் ஒபாமா ஆலோசனை நடத்தினார். அப்போது ஒபாமா பேசுகையில், ‘மத்திய அமெரிக்க நாடுகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியாக எல்லைகளை கடந்து அமெரிக்கா செல்ல அனுமதிக்கக் கூடாது. இதனால், சிறுவர்கள் தேவையில்லாத அபாயங்களை சந்திக்க நேரிடும்’ என்றும் எச்சரிக்கை விடுத்தார். எல்லைகளில் கண்காணிப்பை பலப்படுத்தவும், குடியேற்றத்துறையை மேலும் மேம்படுத்தவும் உறுப்பினர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே இந்த பிரச்னையை தீர்க்க முடியும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.கடந்த அக்டோபரில் இருந்து இதுவரை பெற்றோர்கள் இல்லாமல் சுமார் 57 ஆயிரம் சிறுவர்கள் எல்லை தாண்டி அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.