சாவு ஊர்வலத்தில் ரவுடி கொலை சிறையில் கொலை திட்டம்: திடுக் தகவல்
சென்னை: பிரபல ரவுடி, சாவு ஊர்வலத்தில் நேற்று வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை திட்டம் சிறையில் தீட்டப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.சென்னை அண்ணா சாலை எல்ஐசி பின்புறம் உள்ள பார்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (41). பிரபல ரவுடியான இவர் மீது அண்ணா சாலை காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இவருக்கு நெருக்கமான ஆயிரம்விளக்கை சேர்ந்த தியாகு என்பவர் காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் ராஜா சென்றபோது 4 பேர் அவரை வெட்டி கொலை செய்தனர்.இது குறித்து, ஐஸ்அவுஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் விசாரணையில் இறங்கி உள்ளனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட ராஜா மீது பல்வேறு புகார்கள் உள்ளன. மேலும், இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பார்டர் தோட்டம் பகுதியில் உள்ள ரஞ்சித் என்பவர் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். ரஞ்சித் என்பவர் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான தொப்புளான் குமார் (40) என்பவரது கூட்டாளியாகும். தொப்புளான் குமார் தற்போது, புழல் சிறையில் உள்ளார். அவர் தனது நண்பரான ரஞ்சித் குமார் மீது தாக்குதல் நடத்திய ராஜாவை தீர்த்துக் கட்ட சிறையில் இருந்தவாறே திட்டம் தீட்டி கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், ராஜாவால் பாதிக்கப்பட்ட வேறு யாரேனும் கொலை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.