ஈராக்கில் இருந்து மதுரை வந்த 2 தொழிலாளர்களுக்கு கண்ணீர் மல்க வரவேற்பு
மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டானிபட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (33). இவர் கடந்த பிப்ரவரி மாதம் கம்பி கட்டும் வேலைக்காக ஈராக் சென்றார். போர்த் டைமென்ஷன்ஸ் என்னும் நிறுவனத்தில் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் என பேசி அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மாதம் ரூ.21 ஆயிரம் மட்டுமே தரப்பட்டது. ஈராக்கில் உள்நாட்டு பிரச்னை ஏற்பட்டதால் கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.
கடந்த மாதம் பிரச்னை உச்சக் கட்டத்தை அடைந்ததால் உணவு, தண்ணீர், மின்சாரம் என அனைத்திலும் தட்டுப்பாடு ஏற்பட ஆரம்பித்தது. தனது நிலையை குடும்பத்தாருக்கு முத்துக்குமார் போன் மூலம் தெரிவித்தார். குடும்பத்தினர் மூலம் இந்திய தூதரகத்துக்கு தகவல் சென்றது. இந்திய தூதரக அதிகாரிகள் முத்துக்குமார் இருப்பிடத்தை அறிந்து அவரை மீட்டு இந்தியாவுக்கு அனுப்பினர். நேற்று காலை விமானத்தில் மதுரை வந்தார் முத்துக்குமார். அவரை மனைவி கலா, இரு குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
முத்துக்குமார் கூறுகையில், நாங்கள் பணியில் இருந்த பகுதியில் 2,147 இந்தியர்கள் வேலை பார்த்தோம். அதில் 4 தமிழர்கள் மட்டுமே இருந்தோம். அங்கு சிக்கியவர்களில் 143 பேர் மீட்கப்பட்டு நேற்று முன்தினம் ஈராக்கில் இருந்து டெல்லி அழைத்து வரப்பட்டோம். நானும், சிவகங்கையை சேர்ந்த காளிமுத்தனும் சென்னை வழியாக மதுரைக்கு விமானத்தில் வந்தோம். மேலூர் அழகிச்சிபட்டியை சேர்ந்த பெருமாள், ஆண்டிபட்டியை சேர்ந்த முத்துச்சாமி அங்குள்ளனர். எப்போதும் குண்டு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். நாங்கள் தப்பி வருவோம் என நினைக்கவில்லை. குடும்பத்தினரை பார்த்த பின்னரே நிம்மதி வந்துள்ளது‘ என்றார். முத்துக்குமாருடன் மதுரை வந்த சிவகங்கை காளிமுத்தனையும் குடும்பத்தினர் ஆரத்தழுவி வரவேற்றது பார்ப்போரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.