கூடுவாஞ்சேரி: சென்னை நந்திவரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (34). இவர் கட்டிட கான்ட்ராக்டர். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.இந்நிலையில், பெரும்பாக்கத்தில் வசித்துவரும் உறவினர் வேலாயுதம் மகளுடன் வெங்கடேசனுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. அந்த பெண்ணுக்கு கூடுவாஞ்சேரியில் தனி வீடு எடுத்துக் கொடுத்து, அவருடன் வெங்கடேசன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.மகளை காணவில்லை என்று சேலையூர் போலீசில் புகார் கொடுத்திருந்த வேலாயுதத்துக்கு மகள், கூடுவாஞ்சேரியில் இருப்பது தெரியவந்ததும் ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து, வேலாயுதம் தனது தம்பி அரிகிருஷ்ணன், உறவினர்கள் சுரேஷ், அய்யனார், மற்றும் சிலருடன் கடந்த 6ம் தேதி ஒரு கால் டாக்சியில் நந்திவரத்தில் உள்ள வெங்கடேசன் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வெங்கடேசன் இல்லை என்றதும் நேராக கூடுவாஞ்சேரி விரைந்துள்ளனர். அங்கு வெங்கடேசன் தங்கியிருந்த வீட்டின்அருகில் கால் டாக்சியை நிறுத்திவிட்டு கண்காணித்துள்ளனர்.
சிறுநீர் கழிக்க நள்ளிரவு வெங்கடேசன் வீட்டுக்கு வெளியே வந்தபோது, அந்த கும்பல் ஓடிச் சென்று, வெங்கடேசனை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு, காருக்குள் வைத்தே வெங்கடேசனை சரமாரி தாக்கி உள்ளனர்.இதற்கிடையே கணவர் வெங்கடேசனை காணவில்லை என்று விஜயலட்சுமி, கூடுவாஞ்சேரி போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். வேலாயுதம் வீட்டில் வெங்கடேசன் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்து அங்கு போலீசார் நேற்று விரைந்தனர். ஆனால் அங்கு வெங்கடேசன் இல்லை. அரிகிருஷ்ணன் வீட்டில் வெங்கடேசன் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது, உடனடியாக போலீசார் அங்கு விரைந்தனர்.
போலீசாரை கண்டதும் அங்கிருந்த கும்பல் தப்பியோடி விட்டது. இதன் பிறகு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வெங்கடேசனை மீட்டனர். உடல் முழுவதும் காயத்துடன் இருந்த அவரை தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், சென்னை வடபெரும்பாக்கத்தை சேர்ந்த அய்யனார், அரிகிருஷ்ணன், கால்டாக்சி டிரைவர் சிவகுமார் ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். வேலாயுதம் உள்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.