புதுடெல்லி: மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்து வாக்கெடுப்பு இல்லாத விவாதம் நடத்த எதிர்கட்சியான காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கியது. கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என இரண்டு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோஷம் எழுப்பின. இதற்கு மாநிலங்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ரயில் கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வு குறித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசினர். அதற்கு நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பதில் அளித்தார். அவரது பதிலில் திருப்தி இல்லை என காங்கிரஸ், இடதுசாரி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மக்களவையில் கேள்வி நேரத்தை ஒத்திவைக்க சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மறுத்து விட்டார். இதை தொடர்ந்து எதிர்கட்சிகள் அமளி காரணமாக நாள் முழுக்க அவை ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையில் வாக்கெடுப்பு அல்லாத விவாதம் நடத்த அனுமதி அளிப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதை சிபிஎம், ஆர்ஜேடி, பிஜேடி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் ஏற்றுக் கொண்டன. காங்கிரஸ் மட்டும் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் வேண்டும் என பிடிவாதம் பிடித்தது. நேற்று மக்கள¬யில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் விலைவாசி தொடர்பான விவாதம் குறித்து அமளி ஏற்படவில்லை. அதற்கு பதிலாக ரயில்வே பட்ஜெட்டில் தங்களது மாநிலம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட நோட்டீசை வாபஸ் பெற்றுக் கொள்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சபாநாயகரிடம் தெரிவித்தார். எந்த விதியின் கீழ் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதை சபாநாயகர் விருப்பத்துக்கு விட்டு விடுவதாக கார்கே தெரிவித்தார்.விலைவாசி உயர்வு குறித்து சுமார் இரண்டரை மணி நேரம் விவாதம் நடத்த சபாநாயகர் ஒப்புதல் அளித்துள்ளார். இன்று மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதன்பின்னர் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.