மகாராஷ்டிராவில் இடி தாக்கியதில் பட்டாசு ஆலை தரைமட்டம் 8 பேர் பலி: பலர் படுகாயம்
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் இடி தாக்கியதில் அடுத்தடுத்து இரண்டு பட்டாசு ஆலைகள் இடிந்து தரைமட்டமானது. இதில் 8 பேர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் வாஷி தாலுகா தெர்கேடா கிராமத்தில் வெல்கம், பாரிஸ் என்ற இரண்டு பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. தெர்கேடா கிராமத்தில் நேற்று இடி மின்னலுடன் மழை பெய்தது. வெல்கம் பட்டாசு தொழிற்சாலையின் யூனிட் ஒன்றின் மீது நேற்று இடி தாக்கியது. இதில் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின.
அருகில் இருந்த பாரிஸ் தொழிற்சாலையின் மீதும் இடி விழுந்தது. அங்கும் பட்டாசுகள் மற்றும் வெடிமருந்துகள் வெடித்து சிதறின. இதில் இரண்டு ஆலைகளும் தரை மட்டமானது. இரண்டு தொழிற்சாலைகளிலும் 20க்கும் மேற்பட்டோர் பணி செய்து கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் கட்டிட இடிபாடுகள் மற்றும் வெடிவிபத்தில் சிக்கினர். நேற்று இரவு வரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள தெர்னா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் மீட்பு படையினர் அங்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. போலீசார் மற்றும் பொது மக்கள் துணையுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.