நாட்டின் 16வது மக்களவையில் முதலாவது பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நாள் முழுக்க ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதில் வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், கடந்த 10 ஆண்டுகளில் அவை ஒத்திவைப்பதால் ஏற்படும் கஷ்டத்தை அனுபவ ரீதியாக நன்கு உணர்ந்திருந்த காங்கிரஸ்தான் நேற்றைய அமளிக்கு காரணம் என்பதுதான். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2வது அரசின்போது, ஒவ்வொரு சட்டமசோதாவையும் நிறைவேற்ற அந்த அரசு பட்டபாடு கொஞ்சம்நஞ்சமல்ல. அந்த அளவுக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் அமளி, துமளி காணப்பட்டது. 15வது மக்களவைதான் சுதந்திர இந்தியாவில் அதிகமாக இடையூறுகளை சந்தித்த அவை. நாட்டின் 3வது மக்களவையில் 107 சதவீதம் பணிகள் நடந்தன. அதாவது, 100 மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டிருந்தால், அதை தாண்டி 107 சதவீத மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 7வது மக்களவையில் இது 120 சதவீதமாக இருந்தது. முந்தைய 15வது மக்களவையில் இது வெறும் 61 சதவீதம்தான்.
மொத்தம் 326 சட்டமசோதாக்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்தது. அதில் 177 மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. அது மட்டுமல்ல, ஒரு தொடர் முழுவதும் வீணடிக்கப்பட்டதும், அவைக்குள்ளேயே மற்ற உறுப்பினர்கள் மீது பெப்பர் ஸ்பிரே அடித்த மோசமான சம்பவங்களும் இதற்கு முன்பு எந்த அவையிலும் நடந்ததில்லை. மேலும், அந்த மக்களவையின் ஒரு கூட்டத் தொடர் முழுவதுமே அமளியால் செயல்பட முடியாமல் போனது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்படுவதற்கு ஒரு வினாடிக்கு சராசரியாக 2.5 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது என கணக்கு சொல்லப்படுகிறது. ஒரு தொடர் முழுவதும் முடங்கியது என்றால் மக்கள் பணம் எவ்வளவு வீணாக்கப்பட்டது என்று கணக்கிட்டு பாருங்கள். இந்த சூழ்நிலையில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது.
அதனால், வெறும் 44உறுப்பினர்களை மட்டுமே கொண்ட காங்கிரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அளிக்க விரும்பாமல் தயங்குகிறது. இதன் காரணமாகவோ, என்னமோ பட்ஜெட் தொடரின் முதல் நாளே காங்கிரஸ் தனது எதிர்ப்பை காட்டுகிறது. முதல் நாளிலேயே விலைவாசி உயர்வு, ரயில் கட்டண உயர்வு பிரச்னைகளை எழுப்பி அவையில் அமளியில் ஈடுபட்டுள்ளது. இதனால், முதல் நாளே அவை நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மக்களவையும் முடங்கிப் போனால், எவ்வளவு இழப்பு என்பதை ஆளும் பாஜவும், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசும் உணர வேண்டும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்காமல் செயல்படுவதற்கு இரு தரப்பினரும் ஆக்கப்பூர்வமாக விவாதித்து உரிய வழிவகைகளை காண வேண்டும்.