திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமத்தை மறந்த தலையாரிகள் தாலுகா ஆபீஸ் வாசலில் காத்திருப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தாலுகா அலுவலகத்துக்கு உட்பட்டு 526 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஒரு கிராமத்துக்கு ஒரு தலையாரி இருப்பார். கிராமத்தில் யாருக்கு என்னென்ன சொத்து உள்ளது, வாரிசுதாரர்கள் யார், கிராமத்தில் எத்தனை பேர் வசிக்கிறார்கள். கிராமத்தில் நடக்கும் நல்லது, கெட்டது பற்றி தகவல்களை சேகரித்து வைத்திருப்பார். வருவாய் அதிகாரிகள் கேட்கும்போதும் அவற்றை பற்றி விளக்கம் அளிப்பது தலையாரியின் தலையாய பணியாகும். தலையாரிகள் தங்கள் பணியாற்றும் கிராமத்திலேயே தங்கியிருக்க வேண்டும். கிராம எல்லையில் விபத்தோ, தற்கொலையோ நடந்தால் போலீசார் மற்றும் அதிகாரிகள் வரும்வரை தலையாரி அங்கேயே இருக்க வேண்டும். போலீசார், கிராமத்துக்கு வர வேண்டும் என்றால்கூட தலையாரியின் அனுமதியை பெற வேண்டும். தலையாரிடம் விவரம் கேட்டுவிட்டுதான் நடவடிக்கையில் இறங்குவார்கள்.திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக இருந்த இடங்களுக்கு தலையாரிகள் நியமிக்கப்பட்டனர். இதில் பெரும்பாலான தலையாரிகள் கிராமத்துக்கு செல்வது கிடையாது. இதனால் கிராமத்தில் நடைபெற வேண்டிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மக்கள் கூறும்போது, ‘தாலுகா அலுவலகம் முன் தலையாரிகள் உட்கார்ந்து கொண்டு, பட்டா மாறுதல் பணி, சான்றிதழ் பெற வருபவர்களிடம் பேரம் பேசி வேலையை முடித்துக்கொடுக்கின்றனர். இதனால் கிராமத்தில் நடைபெற வேண்டிய வேலைகளை கவனிப்பது கிடையாது என்றனர்.