பெண்களை போற்றும் கலாசாரம் படைத்த பாரம்பரியமிக்க நாடு இந்தியா. நமது நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் பல தலைமுறைகளாக கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைதான் இருந்தது. ஆனால், இப்போதுள்ள தலைமுறையினரால் தங்களின் பெற்றோரைக் கூட உடன் வைத்து கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு சகிப்புத்தன்மை குறைந்து போய் விட்டது. அதே போல், மருமகளை தங்கள் மகள் போல் பாவிக்க வேண்டிய மாமனார், மாமியார்கள் அவரை கொடுமைப்படுத்துவதும், அதை தட்டிக் கேட்க வேண்டிய கணவரோ கண்டுகொள்ளாமல் இருப்பதும் நடக்கத்தான் செய்கிறது. இப்படியொரு சூழ்நிலையில், அதிகரிக்கும் வரதட்சணைக் கொடுமைகளை தடுப்பதற்காக கடந்த 1983ம் ஆண்டில் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 498ல் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டு பிரிவு 498ஏ சேர்க்கப்பட்டது. இதன்படி, ஒரு பெண்ணை அவரது கணவரோ அல்லது மாமனார், மாமியாரோ கொடுமைப்படுத்தினால் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கலாம். இந்த சட்டத்தின் கீழ் அதிகபட்சம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். ஆனால், பிரிவு 498ஏ&ன் கீழ் ஒரு பெண் புகார் கொடுத்து விட்டாலே, அவளது கணவர், மாமனார், மாமியார், நாத்தனார் என எல்லோரையும் எந்த விசாரணையுமின்றி போலீசார் கைது செய்து விடுகின்றனர். அவர்கள் நிரபராதிகளாக இருந்தாலும் வழக்கின் முடிவில்தான் அதை நிரூபிக்க முடியும்.
உண்மையிலேயே குற்றம் செய்பவர்கள் கைது செய்யப்பட்டால் பரவாயில்லை. ஆனால், கணவருடன் தகராறு ஏற்பட்டு பிரிந்து விடும் மனைவி, வேண்டுமென்றே கணவர் குடும்பத்தினர் மீது பொய் புகார் கொடுத்தால், அவர்கள் கைது செய்யப்பட்டு சமூகத்தில் அசிங்கப்படுத்தப்படுகிறார்கள். கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். சமீப காலமாக இது போன்ற சம்பவங்கள் ஏராளமாக நடக்கின்றன.இது போன்று, அப்பாவி கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பாதிக்கப்படக் கூடாது என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சி.கே.பிரசாத், பி.சி.கோஷ் ஒரு தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளனர். ‘வரதட்சணை கொடுமை வழக்குகளில் போலீசார் கண்ணை மூடிக் கொண்டு யாரையும் கைது செய்யக் கூடாது. கைது செய்வதற்கு தேவையான ஆரம்பகட்ட ஆதாரத்தை பார்க்க வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 41&ல் கூறப்பட்டுள்ள 9 நிபந்தனைகளின்படி கைது அவசியமா என ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளனர். வரதட்சணை கொடுமையை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம், அதன் நோக்கத்தை பறிபோகச் செய்யும் வகையில் பயன்படுத்தப்பட்டால், அதற்கு கடிவாளம் போட வேண்டியது அவசியம்தான். அப்பாவி கணவரோ, மாமனார், மாமியாரோ பாதிக்கப்படக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் கருத்து வரவேற்கக் கூடியது.