ஊதியத்தை நிர்ணயிக்க முடியாமல் அம்மா மருந்தகங்களில் ஊழியர்கள் நியமிப்பதில் குழப்பம்
சென்னை: அம்மா மருந்தகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, ஊதியம் நிர்ணயிப்பதில் முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளனர். அம்மா உணவகம், அம்மா குடிநீரை தொடர்ந்து, அம்மா மருந்தகங்களை தமிழக அரசு தொடங்கியுள்ளது. அம்மா உணவகங்களுக்கும், அம்மா குடிநீர் விற்பதற்கும் படித்தவர்கள்தான் பணியில் நியமிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், அம்மா மருந்தகங்களுக்கு கட்டாயம் டி பார்ம் அல்லது பி பார்ம் படித்தவர்களைத்தான் பணியில் நியமிக்க வேண்டும். தற்காலிகமாக அம்மா மருந்தகங்களில் தனியார் மருத்துவமனையில் டி பார்ம் முடித்தவர்கள் மற்றும் அங்கு பணியாற்றுபவர்களை பணி நியமனம் செய்துள்ளனர். அவர்களுக்கு மாத ஊதியம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
இந்த மருந்தகங்களில் பணியாற்றுபவர்களுக்கு வேலை நேரம், ஊதியம் நிர்ணயிப்பதில் அதிகாரிகள் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் குழப்பத்தில் உள்ளனர். கூட்டுறவுதுறை ரேஷன் கடைகளில் பணியாற்றுபவர்களுக்கு அதிகபட்ச ஊதியம் ரூ.6 ஆயிரத்தை தாண்டவில்லை. இந்த சூழ்நிலையில் அம்மா மருந்தக ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரத்துக்கு அதிகமாக ஊதியம் கொடுத்தால், மற்ற ஊழியர்கள் போராட்டத்தில் குதிக்க வாய்ப்பு உள்ளது என்கின்றனர். டி பார்ம் முடித்த ஒருவரிடம் இது குறித்து கேட்டபோது ‘‘தனியார் மருந்தகங்களிலேயே ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை மாத ஊதியமாக வழங்குகிறார்கள். 12 மணி நேரத்துக்கு ரூ.6 ஆயிரம் மாத ஊதியத்துக்காக தொடர்ந்து பணியில் இருக்க மாட்டார்கள்.‘‘ என்றார்.