இந்தியா&பாக் வீரர்களின் கதையில் பிருத்வி
சென்னை:‘அரண்‘, ‘காந்தகார்' போன்ற படங்களை இயக்கியவர் மேஜர் ரவி. இவர் கூறியது:மோகன்லாலை வைத்து 4 படங்களை இயக்கி இருக்கிறேன். ‘பிக்கெட் 43' என்ற புதிய படத்தில் நடிக்க கேட்டேன். ஸ்கிரிப்டை படித்துவிட்டு, ‘இளம் நடிகர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் என்னை நடிக்கவைத்து அதை பாழ்படுத்திவிடாதீர்கள். வேறு இளம் நடிகரை இதில் நடிக்க வையுங்கள் என்றார் மோகன்லால். பிறகு அந்த ஸ்கிரிப்டுடன் பிருத்விராஜுவை சந்தித்தேன். அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். என்னை கோபக்காரன் என்று அவர் கேள்விப்பட்டாராம். 3 நாள் ஷூட்டிங்கில் பங்கேற்றபிறகு என்னைப்பற்றி கேள்விபட்டது பற்றி கூறிவிட்டு நீங்கள் அப்படி இல்லை என்றார். எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது.
என் படங்களில் சமூக அக்கறையும், ராணுவ விஷயமும் இருக்கும். இப்படத்தில் அது மாறுபட்டிருக்கும். இந்தியா&பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இருநாட்டு வீரர்கள் பற்றிய கதையாக இது உருவாகிறது. எதிரிகள் என்பதைவிட அவர்கள் நட்பாக இருக்கின்றனர். சில இடங்களில் எல்லைகோடோ, இரும்பு வேலிகளோ இருக்காது. அங்கு இருநாட்டு வீரர்களும் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு வாலிபால் விளையாடிக்கொண்டிருப்பார்கள். இருவரும் உணர்வுபூர்வமான விஷயங்களை பகிர்ந்துகொள்வார்கள். இதனால் ஒருவருக்கொருவர் உயிரை கொடுக்க தயங்க மாட்டார்கள். இப்படியொரு நட்பின் அடிப்படையில் இக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. விரோதத்தை பாராட்டுவதைவிட நட்பு பாராட்ட வேண்டும். நானே போரில் பலரை சுட்டு வீழ்த்தி இருக்கிறேன். ஆனால் சண்டை இதற்கு தீர்வுதராது என்று நம்புகிறேன். அன்பால் எதிரிகளையும் வெல்லலாம். இவ்வாறு மேஜர் ரவி கூறினார்.