கூடுவாஞ்சேரியில் டிரான்ஸ்பார்மரை இடம் மாற்ற எதிர்ப்பு
கூடுவாஞ்சேரிசென்னை நந்திவரம்&கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டில் மகாலட்சுமிநகர், ஜெயலட்சுமிநகர், அமுதம் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதமாக குறைந்த மின்னழுத்தம் நிலவியது. இதனால் வீட்டில் உள்ள பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்பட வீட்டு உபயோக பொருட்கள் நாசமானது. குறைந்த மின்னழுத்த பிரச்னையை தீர்க்கவேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர்.இதையடுத்து, கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் எதிரில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் கடந்த வாரம் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து இணைப்பு கொடுத்தனர். நேற்று திடீரென அந்த டிரான்ஸ்பார்மரை வேறு இடத்துக்கு மாற்றினர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் வார்டு கவுன்சிலர்கள் ரவி, சரவணன் ஆகியோர் பொதுமக்களுடன் அங்கு விரைந்தனர். டிரான்ஸ்பார்மரை வேறு இடத்துக்கு மாற்றக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து டிரான்ஸ்பார்மரை மாற்றும் திட்டத்தை ஊழியர்கள் கைவிட்டனர்.