திருத்தணி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இலவச சாப்பாடு நிறுத்தம்
திருத்தணிதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஆறுமுகசாமி கோயில் தெருவில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. உள் நோயாளிகளாக 150 பேர் சிகிச்சை பெறுகின்றனர். தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுகின்றவர்களுக்கு இலவசமாக ரொட்டி, பால் மற்றும் சாப்பாடு வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 4 மாதமாக நோயாளிகளுக்கு இலவச சாப்பாடு கிடையாது. கேண்டீன் நடத்தியவருக்கு பணம் பாக்கி வைத்துள்ளதால். அவர் சாப்பாடு கொடுப்பதை நிறுத்தி விட்டதாக தெரிகிறது. மருத்துவமனை அருகேயுள்ள ஓட்டல்களில் இருந்து சாப்பாடு வாங்கி சாப்பிடுகின்றனர்.
மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஊழியர்கள் வருகை பதிவேடு கருவி பழுதாகிவிட்டது. இதனால் டாக்டர், நர்ஸ்கள் எந்த நேரத்தில் வேலைக்கு வருகின்றனர் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபோல் திருத்தணி அரசு மருத்துவமனையில் உள்ள பல்வேறு அவலங்களை நீக்க வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.