ஒரே குடும்பத்தில் 5 பேர் அணையில் மூழ்கி பலி
திருப்பதி:தாத்தாவின் இறுதிசடங்கில் கலந்து கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அணையில் மூழ்கி இறந்தனர்.தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் தின்னம்பேட்டா மண்டலத்தைச் சேர்ந்தவர் மல்லாரெட்டி. இவர் சில நாட்களுக்கு முன்பு இறந்தார். இவரது இறுதி சடங்கு மற்றும் காரியம் நேற்று முன்தினம் தின்னம்பேட்டா மண்டலம் திண்டி கிராமத்தில் நடந்தது. இதற்காக, அவரது உறவினர்கள் திண்டி கிராமத்திற்கு வந்தனர். நேற்று அருகேயுள்ள அணையில் மல்லாரெட்டி குடும்பத்தைச் சேர்ந்த ஐதராபாத்தில் வசிக்கும் பேரன்கள் திரவுபதி ஹர்ஷவர்தன்ரெட்டி (30), பிரனீத்ரெட்டி (25), வாராங்கல் மாவட்டம் ஜனதா மண்டலம் ஹனீஸ்ரெட்டி(28) தின்னம்பேட்டா மண்டலம் ஜோஷ்னா(23), தேவமணி(18) மற்றும் சிலர் குளித்தனர்.
அவர்கள் அணைக்கு தண்ணீர் வரும் கால்வாய்களில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து 5 பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதையறிந்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், பொதுமக்கள் அணைக்குச் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும், நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில், 5 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்.இதுகுறித்து தின்னம்பேட்டா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.