கொல்கத்தா:‘எங்கள் கட்சி தொண்டர்களை தாக்கினால், மார்க்சிஸ்ட் கட்சி பெண்களை பலாத்காரம் செய்ய இளைஞர்களை அனுப்புவேன்’ என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி தபஸ்பால் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆளுங்கட்சியான திரிணாமுல் கட்சியின் எம்பி தபஸ் பால். சமீபத்தில் இவர் கட்சி கூட்டத்தில் பேசும் போது, ‘மார்க்சிஸ்ட் தொண்டர்கள் தொடர்ந்து எங்கள் கட்சி தொண்டர்களை தாக்கி வருகின்றனர். இதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் மார்க்சிஸ்ட் கட்சி பெண் தொண்டர்களை பலாத்காரம் செய்ய இளைஞர்களை அனுப்புவேன்’ என்று மிரட்டினார். இதை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, தபஸ்பால் பேச்சு மேற்கு வங்கத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கூறுகையில், ‘தபஸ் பால் பேசியது குறித்து விசாரணை நடத்தப்படும். அவ்வாறு அவர் கூறியிருந்தால் அதை ஏற்க முடியாது’ என்றார். ‘தபஸ்பாலின் பேச்சை கட்சி ஒருபோதும் ஆதரிக்காது. அவரது பேச்சு முற்றிலும் பொறுப்பற்ற பேச்சாகும்’ என்று செய்தி தொடர் பாளர் டெரக் ஓ பிரைன் கண்டித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் பிருந்தா கரத், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி ஆகியோர் தபஸ் பால் மீது லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். தேசிய பெண்கள் உரிமை ஆணையமும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தபஸ்பால் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘நான் ரேப்(பலாத்காரம்) என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. ‘ரெய்டு’ நடத்துவோம் என்றுதான் சொன்னேன். அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்’ என்றார்.