சென்னை: சென்னையில் 11 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் 4வது நாளாக மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று காலையில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு முதல் இன்று காலைக்குள் 7 சடலங்கள் எடுக்கப்பட்டன. இத்துடன் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. சென்னை அருகே போரூர்& குன்றத்தூர் சாலையில் உள்ள முகலிவாக்கம் பாய்கடை பஸ் ஸ்டாப் அருகருகே 11 மாடி கொண்ட 2 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த கட்டிடத்தை மதுரையை சேர்ந்த டிரஸ்ட் ஹைட்ஸ் என்ற நிறுவனம் கட்டியது. இங்கு தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர் மற்றும் ஆந்திரா, ஒடிசாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
கடந்த சனிக்கிழமை மாலையில், வேலை முடிந்து கட்டிடத்தின் உள்ளே சம்பளம் பட்டுவாடா நடந்தது. அப்போது அந்த பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. திடீரென இந்த 11 மாடி கட்டிடம் சரிந்து விழுந்தது. இதில் 4 மாடிகள் மண்ணில் புதைந்தது. கட்டிட இடிபாடுகளில் தொழிலாளர்கள் சிக்கி தவித்தனர். அங்கு மக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் போலீஸ், தீயணைப்பு படையினர் மற்றும் தமிழக பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர். அரக்கோணத்தில் இருந்து பேரழிவு மீட்புக் குழுவினர் வந்தனர்.
கடந்த 4 நாட்களாக மீட்புக் குழுவினர் வெயில், மழையை பொருட்படுத்தாமல் இடிபாடுகளை அகற்றி, சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். ஒரு சிறுமி, பெண் உள்பட நேற்று வரையில் 23 பேரை உயிருடன் மீட்டனர். 20 சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன. மீட்பு பணியை முதல்வர் ஜெயலலிதா நேற்று முன் தினம் மாலையில் பார்வையிட்டார். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேற்று நேரில் வந்து பார்வையிட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற தொழிலாளர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அங்குள்ள பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களையும் சந்தித்து பேசினார். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்க சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழக அரசின் மீட்புப்பணி திருப்தி அளிக்கிறது என்றும், ஆந்திராவில் இருந்து மீட்புக்குழுவினர் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், நேற்றிரவு விடிய,விடிய மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. நேற்றிரவில் இருந்து இன்று காலை 7.30 மணிக்குள் ஒரு பெண் மற்றும் 6 ஆண் சடலங்கள் எடுக்கப்பட்டன. இத்துடன் இறந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 27 ஆகியுள்ளது. காலை 7.30 மணியளவில் இடிபாடுகளில் ஒரு பெண்ணின் கை தெரியவே நவீன கருவிகளை கொண்டு அருகில் சென்று கவனித்த போது அவர் உயிருடன் இருப்பது தெரிந்தது. உடனடியாக அப்பகுதியில் இடிபாடுகளை கவனமாக நீக்கி, அந்த பெண்ணை உயிருடன் மீட்டனர். அதைத் தொடர்ந்து மேலும் 2 ஆண்கள் மீட்கப்பட்டனர். ஆந்திராவை சேர்ந்த அனுசூரியா, மகேஷ் மற்றும் தமிழகத்தை சேர்ந்த செந்தில் ஆகிய 3 பேரே மீட்கப்பட்டவர்கள். அவர்களுக்கு முதலுதவி அளித்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கட்டிடத்தின் உள்ளே சிக்கியிருக்கும் திருவேங்கடம் என்பவரின் அண்ணன் வெங்கடேஷ் கூறும்போது, ‘என் தம்பி திருவேங்கடம் பாடியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்தார். கடந்த வியாழக்கிழமைதான் இந்த கட்டிடத்துக்கு வேலைக்கு வந்தார். உள்ளே சிக்கியுள்ள அவரது கதி என்னவென்று தெரியவில்லை. திருவேங்கடம் மனைவி, குழந்தையுடன் உள்ளோம். தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிக்கிறோம். அதிகாரிகளும் எந்த ஏற்பாடும் செய்து தரவில்லை. என்ன செய்வதென்று தெரிய வில்லை’ என்றார்.