ஊத்துக்கோட்டையில் சாலை மறியல் தேமுதிக பெண் நிர்வாகி கைது
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் சாலை மறியல் செய்த தேமுதிக மகளிரணி நிர்வாகி, மற்றும் அவரது கணவரை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் 50 பேரை தேடுகின்றனர். ஊத்துக்கோட்டை நாகலாபுரம் சாலையில் வணிக வரித்துறை, மதுவிலக்கு அமல்பிரிவு சோதனை சாவடிகள் அலுவலகம் கட்டுவதற்கு பொதுப்பணி துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த வீடு, கடைகள் கடந்த 27ம் தேதி அகற்றப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு இடமின்றி கோயிலில் தங்கினர். இதை கண்டித்தும், பாதிக்கப்பட்டவருக்கு மாற்று இடம் ஒதுக்க கோரியும் நேற்று திருப்பதி& சென்னை சாலையில் மக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதித்தது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் சாந்தி (40), அவரது கணவர் ஜான்சன் (45) ஆகியோரை இன்று காலையில் போலீசார் கைது செய்தனர். அதே பகுதியை சேர்ந்த முகமது அப்பாஸ், ரவி, மஞ்சுளா, லட்சுமி, லோகேஸ்வரி உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.