ஐதராபாத்:தெலங்கானா மாநிலத்தின் முதல் பட்ஜெட் இந்த மாதம் இரண்டாவது வாரம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் ரூ. 1 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போட மாநில முதல்வர் சந்திரசேகரராவ் திட்டமிட்டிருப்பதாக மாநில வருவாய் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆந்திராவை பிரித்து தெலங்கானா புதிய மாநிலம் கடந்த ஜூன் 2ம் தேதி உதயமானது. கடந்த மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. தெலங்கானா பிராந்தியத்தில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் தெலங்கானா மாநிலத்தின் முதல் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில் தெலங்கானா சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 12ம் தேதி தொடங்க இருக்கிறது. ஒருவாரம் நடைபெற இருக்கும் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தெலங்கானா மாநிலத்தின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் புதிதாக வரிகள் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தேர்தல் அறிக்கையில் பட்டமேற்படிப்பு வரை இலவச கல்வி, முதியோருக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம், உடல் ஊனமுற்றோருக்கு மாதம் ரூ. 1500 ஓய்வூதியம், தலித்துகளுக்கு 3 ஏக்கர் இலவச நிலம், ஏழைகளுக்கு இரண்டு படுக்கை அறை கொண்ட இலவச வீடு என பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இவை அனைத்தையும் நிறைவேற்றும் வகையில் ரூ. 1 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போட சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார். இந்த வார இறுதியில் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது பட்ஜெட் தொகை இறுதி செய்யப்படும் என ஐதராபாத் வட்டாரங்கள் தெரிவித்தன.