நடத்தை சந்தேகத்தில் பயங்கரம் கோடரியால் வெட்டி மனைவி படுகொலை கணவனும் தூக்கிட்டு தற்கொலை
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே மனைவியை கொன்ற கணவன் தானும் தற்கொலை செய்து கொண்டார்.ஈரோடு மாவட்டம் கெம்பநாயக்கன்பாளையம் நரசாபுரம் டேம் ரோட்டை சேர்ந்தவர் ராமசாமி (51). ஒரு கை இழந்த மாற்றுத் திறனாளி. இவரது மனைவி அம்மாசையம்மாள் (42). திருமண விசேஷங்களுக்கு சமையல் வேலைக்கு சென்று வந்தார். இவர்களின் மகன் மாரிமுத்து (22). கரும்பு வெட்டும் தொழிலாளி. நேற்று முன்தினம் நள்ளிரவு ராமசாமி மது அருந்தி விட்டு போதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அம்மாசையம்மாள் வேலைக்கு சென்று வந்த அசதியில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். மனைவியை பார்த்ததும் ராமசாமிக்கு கடும் கோபம் வந்துள்ளது. விறகு வெட்டும் கோடரியால் அம்மாசையம்மாள் தலையை ராமசாமி வெட்டினார்.
இதில் சம்பவ இடத்திலேயே அம்மாசையம்மாள் இறந்தார். போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பார்களே என்ற பயம் ராமசாமிக்கு வந்துள்ளது. வீட்டுக்கு வெளியே வந்த அவர், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண் டார். நேற்று காலை 10 மணியளவில் ராமசாமியின் மகன் மாரிமுத்து வீட்டுக்கு வந்து பார்த்த போது தாய் அம்மாசையம்மாள் ரத்தவெள்ளத்திலும், தந்தை ராமசாமி தூக்கில் தொங்கிய நிலையிலும் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். நடத்தை சந்தேகத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.