ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே படுக்கை அறையில் மனைவி கழுத்தை நெரித்து கணவர் படுகொலை செய்தார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் கடையம் அருகேயுள்ள அருணாசலபட்டியை சேர்ந்தவர் உதயராஜா என்ற ராமசாமி(28). இவர் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சக்திசெல்வி. ஒரு பெண் குழந்தை உள்ளது.உதயராஜா கேரளாவிற்கு வேலைக்கு சென்று விடுவதால், மனைவி சக்திசெல்வி அடைக்கலபட்டினத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். கடந்த 10 நாட்களாக அவர் பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார்.இந்நிலையில், கேரளாவில் இருந்து உதயராஜா நேற்று இரவு மனைவியை பார்ப்பதற்காக அடைக்கலபட்டினத்திற்கு வந்தார். அங்கு தனி அறையில் நள்ளிரவு 12 மணிவரை இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் திடீரென உதயராஜா அதிகாலை 2 மணியளவில் பைக்கை எடுத்துக்கொண்டு வெளியில் சென்று விட்டார்.
திடீரென அவர் வெளியில் சென்றதால், சந்தேகமடைந்த சக்திசெல்வியின் தாய் மற்றும் உறவினர்கள் அவர் படுத்திருந்த அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது சக்திசெல்வி படுக்கையில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து ஆலங்குளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:சக்திசெல்வியின் திருமணத்தின்போது நகை, பணம் வரதட்சணையாக வழங்கப்பட்டது. மேலும் உதயராஜாவுக்கு 3 பவுன் செயின் போடுவதாக கூறியுள்ளனர். ஆனால் இதுவரை உதயராஜாவுக்கு செயின் போடவில்லை.இதுதொடர்பாக சக்திசெல்விக்கும் அவரது மாமியாருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கணவர் கேரளாவிற்கு சென்ற நேரத்தில் சக்திசெல்வி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிடுவாராம். இதையடுத்து மனைவியின் நடத்தையிலும் உதயராஜாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தகராறும் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று உதயராஜா, மனைவியிடம் செயின் குறித்து பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து ஆத்திரமடைந்த உதயராஜா மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். தலைமறைவான உதயராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.