குன்னூர்: அரசின் இலவச பாட புத்தகங்களை வெளிமார்க்கெட்டில் விற்ற கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இந்த புத்தகங்களை வாங்கி, மாணவர்களுக்கு விற்ற தனியார் பள்ளி முதல்வர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசு சார்பில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த விலையில் இந்த புத்தகங்களை வாங்கி மாணவர்களுக்கு வழங்கி வருகின்றன.இதனிடையே நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் தமிழக அரசின் இலவச பாடப்புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த புகாரின் பேரில் நேற்று குன்னூர் ஆர்.டி.ஒ செல்வராஜ் மற்றும் போலீசார் நேற்று அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.
ஸ்டேஷனரி கடை ஒன்றில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், கணக்கு, வணிகவியல், சமூக அறிவியல், அறிவியல், தாவிரவியல், விலங்கியல், கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பாட புத்தகங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து கடை உரிமையாளர் பத்மநாபனை கைது செய்தனர். மேலும் பத்மநாபன் கொடுத்த தகவலின் பேரில் குன்னூரிலுள்ள தனியார் பள்ளியில் ஆய்வு செய்தனர். அங்கு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடபுத்தகங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது. இலவச பாடபுத்தகத்தின் முதல் பக்கத்தில் விலை இல்லா பாடநூல் என்று அரசு சார்பில் அச்சிடப்பட்ட பக்கத்தை மட்டும் கிழித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. வகுப்புகளுக்கு சென்று ஒவ்வொரு மாணவரின் பைகளையும் அதிகாரிகள் சோதனை நடத்தி இதை கண்டுபிடித்தனர்.பத்மநாபன் குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனியார் பள்ளி முதல்வர் கிளன்ரோசி மீது திருட்டு பொருட்களை வாங்கி விற்றதாக போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.