திருமுல்லைவாயலில் மூதாட்டி கொலை 5 மாதம் ஆகியும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்
ஆவடி: திருமுல்லைவாயலில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டார். இந்த குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் அம்பேத்கர் நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முத்து (72). பாரிமுனையில் உள்ள பர்னிச்சர் கடையில் தங்கி வேலை செய்தார். இவரது மனைவி ஜாஸ்பின் (68). இவர்களது 4 மகன்களும் சென்னையில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால் ஜாஸ்பின் மட்டும் வீட்டில் தனியாக வசித்தார்.கடந்த மார்ச் 5ம் தேதி வீட்டில் இருந்த ஜாஸ்பின் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். அவரது 7 பவுன் நகை கொள்ளை அடித்து சென்றனர்.இது குறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 5 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். ஜாஸ்பினின் உறவினர்கள், அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் என 300க்கு மேற்பட்டவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரித்துவிட்டனர். ஆனால் கொலையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. கொலை நடந்து 5 மாதம் ஆன பிறகும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.