தாம்பரம் அருகே வீடு உடைத்து 10 பவுன் கொள்ளை
தாம்பரம்: தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பாரதி நகர் 6வது தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் வினோத் (26). கேட்டரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கர்ப்பமாக இருப்பதால் அவரை அழைத்துக் கொண்டு கடந்த 10ம் தேதி சொந்த ஊரான சிவகாசிக்கு சென்றார் வினோத்.இந்நிலையில் இன்று காலை வினோத்தின் வீடு உடைந்து கிடந்தது. வீட்டின் உரிமையாளர் ஜெயக்குமார், இதை பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்தார். உடனே வினோத்துக்கு தகவல் தெரிவித்தார். அவர், தாம்பரம் ஜோதி நகரில் வசிக்கும் தந்தைக்கு தகவல் தெரிவித்து பார்க்கும்படி கூறியுள்ளார். அவர் சென்று பார்த்தபோது, வீட்டில் 10 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது தெரிந்தது.இது குறித்து பீர்க்கன்காரணை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.