ராம.நாராயணன் உடலுக்கு கருணாநிதி அஞ்சலி
சென்னை: மறைந்த ராம.நாராயணன் உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.சிறுநீரக கோளாறு காரணமாக இயக்குனர் ராம.நாராயணன் சிங்கப்பூர் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். அவரது உடல் விமானம் மூலம் நேற்றிரவு சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று காலை திமுக தலைவர் கருணாநிதி அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, நிருபர்கள் அவரிடம் ராம.நாராயணன் பற்றி கேட்டபோது கூறியதாவது:அரசியலிலும் இயக்கத்திலும் கலையுலகத்திலும் என்னோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டு பாடுபட்டவர், பணியாற்றியவர் ராம.நாராயணன். அவர் இல்லாத கலையுலகத்தை இன்று என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அத்தகைய அருமை தோழர் விட்டு சென்ற இடத்தை நிரப்புவதற்கு அவரை போன்ற தியாக உள்ளமும் தொண்டுள்ளமும் இயக்க உணர்வும் படைத்தவர்கள் இனிமேல் யார் கிடைப்பார்கள் என்ற ஏக்கம் தான் என்னை வாட்டுகிறது. ராம.நாராயணனை இழந்து தவிக்கின்ற அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், கலையுலக தோழர்களுக்கும் ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு கருணாநிதி கூறினார். முன்னதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் மற்றும் திரையுலகினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ராம.நாராயணன் மறைவையொட்டி இன்று சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் பிற¢பகலில் உடல் தகனம் நடந்தது.