சென்னை: ரயில் கட்டணம் மற்றும் மின்சார ரயில் சீசன் டிக்கெட் கட்டண உயர்வு நாளை முதல் அமலாகிறது. மத்திய ரயில்வே அமைச்சகம் கடந்த 20ம் தேதி பயணிகள் ரயில் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதமும் உயர்த்தியது. இந்த கட்டண உயர்வு உடனே அமலுக்கு வரும் என்று ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா அறிவித்தார். ஆனால், கட்டண உயர்வை கணக்கிடுவதற்கு கால அவகாசம் தேவை என அதிகாரிகள் கூறினர். இதைத் தொடர்ந்து கட்டண உயர்வு, வரும் 25ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு நாடு முழுவதும் பயணிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரயில் கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமென பாஜ கூட்டணி கட்சியான சிவசேனா உள்பட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கட்டண உயர்வை வாபஸ் பெறக் கோரி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், புறநகர் மின்சார ரயில் கட்டண உயர்வை மட்டும் மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக இன்று தகவல்கள் வெளியாகின. எனினும், அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகின்றன. மின்சார ரயில் சீசன் டிக்கெட் கட்டணமும் இரண்டு மடங்கு அளவுக்கு உயர்த்தப்படுகிறது. மின்சார ரயில் கட்டணம் மாநகர பஸ் கட்டணத்தை விட பல மடங்கு குறைவாக இருப்பதால் பெரும்பாலானோர் மின்சார ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். மின்சார ரயில் சீசன் டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்படுவது அரசு, தனியார் ஊழியர்களை கவலையடைய வைத்துள்ளது. மாதாந்திர சீசன் கட்டணம் ரூ.85 ஆக இருந்தது ரூ.150 ஆக உயர்த்தப்படுகிறது. பழைய டிக்கெட் கட்டணத்திற்கும், உயர்த்தப்பட்ட டிக்கெட் கட்டணத்திற்கும் உள்ள வித்தியாச தொகையை பயணிகள் கட்டாயம் செலுத்த வேண்டும். கூடுதல் கட்டணத்தை ரயிலில் பயணம் செய்யும் போது டிக்கெட் பரிசோதகரிடம் கொடுக்கலாம். அதற்கு டிக்கெட் பரிசோதகர்களால் ரசீது வழங்கப்படும். டிக்கெட் கவுண்டர்களிலும் கூடுதல் கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்று கொள்ளலாம்.