அண்ணாநகர்: பண்ருட்டி பகுதியில் உள்ள கோயிலில் திருடப்பட்ட சிலைகளுடன் கோயம்பேடு பகுதியில் சுற்றித்திரிந்த கும்பலை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து பஞ்சலோக சிலைகளை மீட்டுள்ளனர்.கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவில் அடங்கிய வல்லம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. கடந்த 19ம் தேதி இந்த கோயிலில் உள்ள 3 பஞ்சலோக சிலைகள் திருட்டுப்போனது.இதுபற்றி சிலை கடத்தல் பிரிவு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடத்தல் கும்பலை பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை கோயம்பேடு பஸ் நிலையம் அருகே ஒரு கார், 2 பைக்கில் நின்றிருந்த கும்பல் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் சென்று அந்த கும்பலை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் பண்ருட்டி தாலுகா நன்குப்பத்தை சேர்ந்த ஆறுமுகம் (31), புலவன்குப்பம் சிவா (27), எலவத்தடி செல்வம் (35), கிழக்கு மேட்டு குப்பத்தை சேர்ந்த செந்தில்குமார் (45) ஆகியோர் என்று தெரிந்தது. இதில் செந்தில் குமார், மேட்டு குப்பம் ஒன்றிய அதிமுக செயலாளர் என்பது தெரிந்தது. அவர்கள் வந்திருந்த காரில் சோதனை நடத்தினர். கார் சீட்டுக்கு அடியில், 2 அடி உயரம், 26 கிலோ எடை கொண்ட பஞ்சலோக திரவுபதி அம்மன் சிலை, ஒன்றரை அடி உயரம் 14 கிலோ எடை கொண்ட அம்மன் சிலை மற்றும் ஒரு அடி உயரம், 10 கிலோ எடை கொண்ட பஞ்சலோக கண்ணன் சிலை இருந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றி, கார், பைக்குகளை பறிமுதல் செய்தனர். சிலை கடத்தல் கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வல்லம் கிராமத்தில் கோயிலில் காணாமல்போன சிலைகள் என்பதும் இவர்கள்தான் அங்கு திருடியதும் தெரிந்தது.