புதுடெல்லி: அண்டை நாடுகளுடன் இந்தியாவின் உறவை பலப்படுத்தும் வகையில் மியான்மருக்கு பஸ் போக்குவரத்து தொடங்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.கடந்த 99ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது டெல்லியில் இருந்து பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரத்திற்கு பேருந்து போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது மத்தியில் மீண்டும் பாஜ தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. அண்டை நாடுகளுடன் உறவை பலப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். வாஜ்பாயைத் தொடர்ந்து நரேந்திர மோடியும் சார்க் நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் வகையில் திட்டங்களை தீட்ட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் ஒரு கட்டமாக இந்தியாவில் இருந்து மியான்மருக்கு பேருந்து போக்குவரத்து தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மணிப்பூரில் உள்ள இம்பாலில் இருந்து மியான்மரில் உள்ள மந்தாலே வரையில் இந்தியா மியான் மர் எல்லை வழியாக சாலை போக்குவரத்து ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே போக்குவரத்து தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்பாலில் இருந்து மந்தாலே வரை 579 கிமீ தொலைவுக்கு சுமார் 14 மணிநேர பயண நேரமாகும். பஸ் கட்டணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ரூ.2000க்கும் குறைவாகவே கட்டணம் நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது. தற்போது இந்தியாவில் இருந்து மியான் மருக்கு சாலை மார்க்கமாக செல்ல போக்குவரத்து வசதி கிடையாது. மியான்மர் செல்ல வேண்டும் என்றால், டெல்லியில் இருந்து விமானம் மூலம் பாங்காக் சென்று அங்கிருந்து மியான்மர் செல்ல வேண்டும். இரு நாடுகளின் உறவை மேம்படுத்தும் வகையில், வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையிலும் மத்திய அரசு இதனை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக சரக்கு போக்குவரத்தையும் மியான்மருக்கு நீட்டிக்கவும் திட்டமி டப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.2012ம் ஆண்டு மியான்மருடன் பஸ் சர்வீஸ் தொடங்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முயற்சி மேற்கொண்டார். ஆனால் ஒப்பந்தம் நிறைவேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.