திருப்பதி: மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் கைதானவர் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தபோது போலீசாரை தள்ளி விட்டு தப்பினார். அப்போது அவர் டிரான்ஸ்பார்மர் மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் நந்திகாமா பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்(35). கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி கரீம்நகர் மாவட்டத்துக்கு வந்தார். அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு கரீம்நகர் மாவட்டம் மந்தனி பகுதியை சேர்ந்த தம்மக்கா (30) என்ற பெண்ணுடன் ரமேஷூக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர், இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். குழந்தை இல்லை. இந்நிலையில் சில நாட்களாக மனைவியின் நடத்தையில் ரமேசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 19ம்தேதி மீண்டும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், மனைவியின் கழுத்தை கத்தியால் அறுக்க முயன்றார். தம்மக்கா அலறி கூச்சலிட்டார். இவரது சத்தம் கேட்டு அருகே உள்ளவர்கள் ஓடி வந்ததால் ரமேஷ் தப்பியோடி விட்டார்.இதுகுறித்த புகாரின்பேரில் அதே பகுதியில் பதுங்கி இருந்த ரமேஷை கடந்த 22ம்தேதி போலீசார் கைது செய்தனர். நேற்று ரமேஷை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் வெளியே அழைத்து வந்தனர். அப்போது ரமேஷ், போலீசாரை தள்ளிவிட்டு காம்பவுன்ட் சுவரை தாண்டி எகிறி குதித்து தப்பியோட முயன்றார். அப்போது எதிர்பாராமல் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி ரமேஷ் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார், ரமேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மந்தனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது பற்றி விசாரணை நடத்திய கரீம்நகர் எஸ்பி சிவகுமார், பணியின்போது அஜாக்கிரதையாக இருந்ததாக மந்தனி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கமலாகர்ரெட்டி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுருஜன்ரெட்டி, ஆஞ்சநேயலு மற்றும் போலீஸ்காரர் சீனிவாசலு ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.