சித்திரை பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலில் பூஜை நேரம் மாற்றம்
திருச்செந்தூர்:சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு வரும் 14ம் தேதி திருச்செந்தூர் கோயில் பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு வரும் 14ம் தேதி காலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது. காலை 8 மணிக்கு தீர்த்தவாரி வைபவம் நடைபெறுகிறது. 10 மணிக்கு உச்சி கால அபிஷேகம் முடிந்ததும் சுவாமி ஆறுமுக நயினாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு கோயில் கலையரங்கில் காலை 9 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, பகல் 10 மணிக்கு கோயில் நாட்குறிப்பு புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து சொற்பொழிவு, இன்னிசை நடைபெறுகிறது.