நடிப்புக்கு முழுக்கு போட்டு டைரக்டர் விஜய்யுடன் திருமணம் அமலா பால் அதிரடி அறிவிப்பு
சென்னை: ‘சிந்து சமவெளி', ‘மைனா' படங்களில் நடித்திருப்பவர் அமலா பால். இவர் இயக்குனர் விஜய் டைரக்ஷனில் ‘தலைவா‘, ‘தெய்வத் திருமகள்‘ படங்களில் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களின் காதல் பற்றி கோலிவுட்டில் கிசுகிசு பரவியபோது இருவருமே அமைதி காத்தனர். ஆனாலும் ரகசியமாக தங்கள் காதலை வளர்த்தனர். விஜய்யின் குடும்ப விழாக்களில் தவறாமல் அமலா பால் கலந்துகொண்டார். சமீபத்தில் விஜய், தான் இயக்கும் ‘சைவம்' என்ற படத்தின் ஆடியோ விழா கொண்டாடினார். இப்படத்தில் அமலா பால் நடிக்காதபோதும் விழாவில் பங்கேற்றார்.
அமலா வந்தபோது விழா அரங்கில் போடப்பட்டிருந்த இருக்கைகள் முழுவதுமாக நிரம்பி இருந்தது. காலதாமதமாக வந்தபோதும் அவருக்கு சிறப்பு இருக்கை வரவழைத்து அமர வைத்தார் விஜய்.நிகழ்ச்சி நடந்த இரண்டு நாட்களில் விஜய், அமலாபால் ரகசிய காதல் அம்பலத்துக்கு வந்தது. இது பற்றி விஜய்யிடம் கேட்க முயன்றபோது அவர் வெளிநாடு சென்றிருப்பதாக தகவல் வந்தது. இதுகுறித்து அமலாபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விஜய்யை காதலிப்பது உண்மைதான். எங்கள் காதல்பற்றி விரைவில் இருவரும் அறிவிப்போம்' என்றார். இந்த ஆண்டு இறுதியில் இருவரின் திருமணம் நடக்க உள்ளது. இதையடுத்து நடிப்புக்கு முழுக்கு போடுவதாக தனக்கு நெருங்கியவர்களிடம் அமலா பால் கூறியுள்ளார்.