அம்மா ஆகிவிட்டால் நடிக்க கூடாதா? கேட்கிறார் பூமிகா
சென்னை: பாலிசியை மாற்றிக்கொண்டு நடிக்க மாட்டேன் என்றார் பூமிகா.‘ரோஜா கூட்டம், ‘சில்லுன்னு ஒரு காதல் உள்பட பல தமிழ் படங்களில் நடித்திருப்பவர் பூமிகா. கடந்த 2007ம் ஆண்டு தனது யோகா ஆசிரியர் பரத் தாகூரை மணந்தார். பூமிகாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து நடிப்பீர்களா என்று பூமிகாவிடம் கேட்டபோது பதில் அளித்தார். அவர் கூறியதாவது:
2 வாரங்களுக்கு முன் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. விரைவில் பெயர் சூட்டு விழா நடத்த உள்ளேன். ‘அம்மா ஆகிவிட்டீர்கள், இனி நடிப்பீர்களா?‘ என்கிறார்கள். ஒருபோதும் நான் நடிப்பிலிருந்து விலகியது கிடையாது. ஒரு முறை நடித்துவிட்டால் வாழ்க்கை முழுவதும் அவர் நடிகைதான். கர்ப்பமாக இருக்கும்போதே நான் நடித்திருக்கிறேன். இனியும் தொடர்ந்து நடிப்பேன். அம்மா ஆகிவிட்டால் நடிக்காமல் இருக்க முடியுமா? அம்மா ஆனதால் நடிக்கக் கூடாது என்பது எந்த விதத்தில் நியாயம்? அதே சமயம், எனது குழந்தையை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துவேன். அடுத்து ‘லட்டு பாபு என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறேன். பிடித்த வேடமாக இருந்தால் மட்டுமே ஏற்கிறேன் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த பாலிசியை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டேன்.இவ்வாறு பூமிகா கூறினார்.