பாடியநல்லூர் மேம்பாலத்தில் டிப்பர் லாரி தீப்பிடித்து எரிந்தது
புழல்:பாடியநல்லூர் மேம்பாலத்தில் டிப்பர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சென்னை செங்குன்றம் அருகே காரனோடையில் இருந்து செங்குன்றம் நோக்கி நேற்று மாலை டிப்பர் லாரி சென்றுக்கொண்டு இருந்தது. பாடியநல்லூர் மேம்பாலத்தில் சென்றபோது அந்த லாரியின் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் ரவி, லாரியை நிறுத்தி இறங்கி வந்து தீயை அணைக்க முயற்சித்தார். ஆனால் இன்ஜின் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
இதுபற்றி கிடைத்த தகவல் அடிப்படையில் செங்குன்றத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து லாரியில் பிடித்திருந்த தீயை அணைத்தனர். இதில் இன்ஜின் பகுதி எரிந்து நாசமானது. லாரி தீப்பிடித்து எரிந்ததால் ஜிஎன்டி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.