திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் கூர்மவிலாசபுரத்தில் தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட உறுப்பினர் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நேற்று நடந்தது. திருவள்ளூர் கலெக்டர் வீரராகவராவ், புகைப்படம் எடுக்கும் பணியை பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் கூறியது: திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து கிராமத்திலும் 5,36,848 பேருக்கு விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. நோய் வருமுன் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் சிறப்பு மருத்துவ நிபுணர்களை பங்கேற்க செய்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 228 முகாம்கள் நடைபெற்று முடிந்துள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 18,000 அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.42 கோடி செலவிடப்பட்டுள்ளது.இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் குணாளன், வட்டாட்சியர் செல்வகுமாரி, ஊராட்சி தலைவர் துரைராஜன், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் நாகேந்திரன், டி.டி.கே.ஹெல்த் ஹேர் குழு மேலாளர் ராஜேÔ¢, மாவட்ட காப்பீட்டு திட்ட அலுவலர் குணசேகரன், ஒருங்கிணைப்பாளர் கமல்ஹாசன், புகைப்பட பணிக்குழு மாவட்ட அலுவலர் பூபாலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.