பதவியை பறித்தால் கவலையில்லை ஆந்திர முதல்வர் கிரண்குமார் பேட்டி
புதுடெல்லி:ஒன்றுபட்ட ஆந்திராவுக்காக முதல்வர் பதவியை பறிகொடுக்கவும் தயாராக இருப்பதாக ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலங்கானா தனி மாநிலம் உருவாக்க மத்திய அமைச்சரவை நேற்று இறுதியாக ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக ஆந்திர மாநில மறு சீரமைப்பு மசோதாவில் நேற்று சில திருத்தங்கள் செய்யப்பட்டது. இருப்பினும் ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்ற சீமாந்திரா பகுதி தலைவர்களின் மிகப்பெரிய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையின் முடிவு சீமாந்திரா பகுதி மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கிடையில் தெலங்கானா மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டன. பாஜ ஆதரவுடன் தெலங்கானா மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தெலங்கானா மசோதா மற்றும் பட்ஜெட் நிறைவேற்றத்துடன் வரும் 17ம் தேதி முன்கூட்டியே நாடாளுமன்றம் முடிவுக்கு வரலாம் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில் தெலங்கானாவுக்கு எதிராக ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெடடி டெல்லியில் ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டம் நடத்தினர். ஏற்கனவே தெலங்கானாவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியதற்காக அவர் மீது காங்கிரஸ் மேலிடம் கடும் கோபத்தில் இருந்தது. தற்போது டெல்லியில் போராட்டம் நடத்தியது மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ஒன்றுபட்ட ஆந்திராவுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக கிரண்குமார் ரெட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:மக்கள் சக்தியை காட்டிலும் முதல்வர் பதவி பெரிதல்ல. ஆந்திரா ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். தனி நபரை விட கட்சி பெரிது. ஆனால் கட்சியை விட மக்கள் பெரிதானவர்கள். மக்களின் உணர்வுகளை கட்சி மதிக்க வேண்டும். பதவிகளை பெரிதாக நினைத்ததில்லை. நான் ஆந்திராவின் நிரந்தர முதல்வர் இல்லை. மாநிலத்தில் 16வது முதல்வர். எனக்கு பின்னர் 17வது, 18 வது என வரிசையாக முதல்வர்கள் வருவார்கள். ஒன்றுபட்ட ஆந்திராவுக்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறு கிரண்குமார் கூறினார்.