காஷ்மீர் அமைச்சர் மீது பெண் டாக்டர் பாலியல் புகார்
ஸ்ரீநகர்:காஷ்மீர் அமைச்சர் மீது பெண் டாக்டர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.காஷ்மீர் மாநிலத்தின் சுகாதார துறை அமைச்சராக இருப்பவர் சபீர் கான். இவர், பெண் டாக்டர் ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. ஸ்ரீநகரில் உள்ள அரசு சுகாதார துறை தலைமை அலுவலகத்தில் கடந்த ஜனவரி 27ம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று பாதிக்கப்பட்ட பெண் டாக்டர், காவல் துறை உயர் அதிகாரியிடம் புகார் செய்தார்.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி தெரிவிக்கையில், குளிர்காலத்தை முன்னிட்டு தலைமை செயலகத்தை ஜம்முவுக்கு விரைவில் மாற்ற உமர் அப்துல்லா ஏற்பாடு செய்து வருகிறார். இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அந்த பெண் டாக்டரை, சுகாதார துறை அமைச்சர் சபீர் கான் தலைமை அலுவலகத்துக்கு அழைத்துள்ளார். அங்கு அவருக்கு 7 நாட்கள் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த பெண் டாக்டர் தனது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென அமைச்சர் சபீர் கான் அவரது அறைக்குள் நுழைந்து பாலியல் ரீதியாக தாக்க முயன்றதாக அந்த பெண் டாக்டர் தனது புகாரில் தெரிவித்துள்ளார் என்று கூறினார்.
இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் அமைச்சரை கைது செய்ய வாய்ப்புள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த பெண் டாக்டர் பிரிவினைவாத அமைப்பை சேர்ந்த பிரமுகரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தற்போது காஷ்மீரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.