தீவிரவாதிகள் ஊடுருவலா? உளவு பிரிவு கண்காணிப்பு
சென்னை:நரேந்திர மோடி உயிருக்கு தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாக மத்திய உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, மோடி எந்த மாநிலத்துக்கு சென்றாலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. இந்நிலையில், வண்டலூரில் நாளை, மோடி பங்கேற்கும் பாஜ கூட்டத்துக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக பாஜ மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் கமிஷனர் ஜார்ஜ் நேற்று ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, நரேந்திர மோடி செல்ல திட்டமிட்டுள்ள அனைத்து பகுதிகளும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த அக்டோபரில் மத்திய பிரதேச சிறையில் இருந்து சிமி இயக்க தீவிரவாதிகளான அசலாம், அஜீதின் அஜிஷ், அமிஷ் ஷாத், சாதிக் ஜாஹிர், மெகபூப் மாலிக், முகமது தாசின் அக்தர் ஆகிய 6 தீவிரவாதிகள் தப்பினர். அவர்களால் மோடிக்கு ஆபத்து ஏற்படலாம் என அச்சம் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, 6 தீவிரவாதிகளின் புகைப்படங்களும் சென்னையின் பல்வேறு பகுதி போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் நடமாட்டம் உள்ளதா என உளவு பிரிவினர் கண்காணித்து வருகின்றனர். இதற்காக, சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் உரையாடல்களையும் ரகசியமாக ஒட்டுகேட்டு வருகின்றனர்.