திருச்செந்தூரில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருச்செந்தூர்:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு அபிஷேகம், 2.30 மணிக்கு உதய மார்த்தாண்ட தீபாராதனை நடந்தது.
அதிகாலை 3.50 மணிக்கு கொடி பட்டம் பல்லக்கில் முக்கிய வீதிகளில் வலம் வந்து 4.30 மணிக்கு கோயிலில் உள்ள கொடி மரத்தை வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து 5.35 மணிக்கு கொடியேற்றப்பட்டது. கொடி மரத்துக்கு அபிஷேகம், அலங்காரத்தை தொடர்ந்து 6.50 மணிக்கு மகாதீபாராதனை நடந்தது.
இதில் கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) ஞானசேகர், தக்கார் கோட்டை மணிகண்டன், முதுநிலை கணக்கு அலுவலர் ராஜேந்திரன், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று மாலை 4.30 மணிக்கு தங்கச் சப்பரத்தில் அப்பர் சுவாமிகள் எழுந்தருளி திருவீதிகளில் உலா வருகிறார். இரவு 7 மணிக்கு ஸ்ரீபலிநாயகர் அஸ்திரத் தேவருடன் தந்தப் பல்லக்கில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 15ம் தேதி நடக்கிறது. 16ம் தேதி இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது.