சவுதி அரேபியாவில் 2 பேர் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம் இந்தாண்டு இதுவரை 7 ‘சதக்‘
ரியாத்:சவுதி அரேபியாவில் கொலை குற்றத்துக்காக 2 பேருக்கு தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்தாண்டில் இதுவரை 7 பேரின் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பலாத்காரம், கொலை, மதத்தை அவமதித்தல், ஆயுதங்களுடன் கொள்ளையடித்தல், போதை மருந்து கடத்துதல் ஆகிய குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படுகிறது. தலையை துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றுகின்றனர்.
தெயிப் நகரில் பழங்குடியினத்தை சேர்ந்த அப்துல்லா என்பவர், அதே இனத்தை சேர்ந்த ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதுபோல தென்மேற்கு அசிர் பகுதியில் நாசர் அல் கதானி என்பவர் அயத் இல் கதானி என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நேற்று இருவரின் தலையை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தாண்டு தொடங்கி 35 நாட்களே ஆகியுள்ள நிலையில், இதுவரை 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தலை துண்டிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78. இதில் வெளிநாட்டினரும் அடக்கம். 2012ல் 79 பேருக்கும், 2011ல் 82 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.