மயிலாடுதுறையில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிக்கு அடி, உதை 3 வாலிபர்கள் கைது
மயிலாடுதுறை:நாகை மாவட்டம், சீர்காழியிலிருந்து மயிலாடுதுறைக்கு நேற்று அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. சேந்தங்குடி என்ற இடத்தில் வந்தபோது, அந்த பஸ் மோதி 2 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியினர் சிலர், பஸ்சை விரட்டிச் சென்று பிடித்து கேட்டபோது, தான் அந்த விபத்தை ஏற்படுத்தவில்லை என டிரைவர் கூறிவிட்டு சென்றுவிட்டார்.
இதையடுத்து மயிலாடுதுறை காமராஜர் பஸ் ஸ்டாண்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக அலுவலகத்துக்கு, லட்சுமிபுரத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி(27), அகரகீரங்குடி பிரசன்னா(29), டவுன் ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த டேவிட்(24) உள்ளிட்ட 5 பேர் சென்றனர்.
அங்கு பணியில் இருந்த இளநிலை பொறியாளர் திருஞானசம்பந்தம்(39) என்பவரிடம், ‘‘உங்கள் டெப்போ பஸ் டிரைவர் விபத்தை ஏற்படுத்திவிட்டு இல்லை என்று கூறுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளனர். ஆனால் இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என திருஞானசம்பந்தம் கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த 5 பேரும், திருஞானசம்பந்தத்தை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். காயம் அடைந்த திருஞானசம்பந்தம், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிந்து சுந்தரமூர்த்தி, பிரசன்னா, டேவிட் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.