உழவன் சேற்றில் கால் வைத்தால்தான், சோற்றில் நாம் கை வைக்க முடியும் என்பார்கள். அதற்காகத்தான், விவசாயிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எல்லா நாட்டு அரசுகளும் செய்கின்றன.சில நேரங்களில் இந்த நடவடிக்கையே கேலி கூத்தாக மாறிவிடும் போது, விவசாயிகளின் வேதனையை சொல்லி முடிக்க முடியாது. எந்த நிலையிலும் விவசாயியின் மனதை நோகடிக்க கூடாது என்பார்கள். அதாவது அவன் மனம் மாறிவிட்டால், இழப்பு அவனுக்கு மட்டுமில்லை; நாட்டுக்கும் என்பதால்தான்.
கும்பகோணம் அருகே ஏரகரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை செயல்படுத்துவதற்கான பணியாளர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. பலன், சுமார் 4 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம். இந்த கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்க வந்த விவசாயிகள், நெல்மணிகளை குவித்து வைத்து பணியாளர்களுக்காக இரவு, பகலாக காத்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே, கூலித் தொழிலாளர்கள் கிடைக்காமல், கஷ்டப்பட்டு அறுவடை செய்து, அவற்றுக்கு சுமைக் கூலி, ஏற்றுக் கூலி கொடுத்து கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்தால், அங்கு பணியாளர்களே இல்லை. விவசாயிகளின் மனநிலையை ஆற அமர யோசித்தால் நெஞ்சு விம்மும்.
அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்தால்தான், தங்களுடைய தொழிலாளர்களுக்கு கூலியும், சாகுபடி செலவையும் சமாளிக்க முடியும். இதை புரிந்து கொள்ளாமல் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகளால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய தொழிலாளர்களே கிடைக்காத நிலையில், 10 முதல் 15 வட்டி வரையில் கடன் வாங்கி தொழிலாளர்களை காலில் விழாத குறையாக அழைத்து வந்து அறுவடை செய்கின்றனர் விவசாயிகள். இன்று பணம் கிடைத்து விடும், கடனை அடைத்து விட்டு நிம்மதியாக சாப்பிடலாம் என்ற நம்பிக்கையில் கொள்முதல் நிலையங்களுக்கு வரும் விவசாயிகளை, ஏமாற்றுவது எந்த விதத்தில் நியாயம்?
இதில், ஆறுதலான விஷயமாக திருவாரூர் மாவட்ட கலெக்டரின் அறிவிப்பு அமைந்துள்ளது. அதாவது, 300 மூட்டைகளுக்கு மேல் நெல் இருந்தால் வீட்டுக்கே வந்து கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள 7 தாலுகாவிலும் தலா ஒரு நடமாடும் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது என்றும் கூறியுள்ளார். உண்மையிலேயே வரவேற்கும் விஷயம். அறிவிப்புடன் நில்லாமல், இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை கலெக்டர் உறுதி செய்தால், விவசாயிகளின் அன்பை பெறுவார்.