வேளச்சேரி:நாற்காலியில் கட்டிப் போட்டு பெண்ணை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தரமணி பாரதியார் நகர் ஸ்தபதி தெருவை சேர்ந்தவர் ரத்தினசாமி (60). இவரது மனைவி பாண்டியம்மாள் (55). எஸ்ஆர்பி டூல்ஸ் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ரத்தினசாமி காவலாளியாக பணியாற்றுகிறார். வீட்டிலேயே சிறிய மளிகைக் கடை நடத்தி வந்தார் பாண்டியம்மாள். தினமும் 2 ஷிப்ட் வேலை பார்க்கும் ரத்தினசாமி, அதிகாலை வந்து சாப்பிட்டுவிட்டு மதிய சாப்பாடு எடுத்துக் கொண்டு வேலைக்கு சென்று விடுவார். இதன்படி இன்று அதிகாலை 5 மணிக்கு சாப்பிட வந்தார் ரத்தினசாமி. அப்போது கதவு மற்றும் வாசலில் ரத்தக்கறை படிந்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை அதிர வைத்தது.
வீட்டின் நடுவில் போடப்பட்டிருந்த நாற்காலியில், கைகளை பின்புறமாக கட்டிய நிலையில் பாண்டியம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்தார். அவரது தலையில் பலத்த வெட்டுக்காயம் இருந்தது. மனைவியின் உடலை பார்த்து ரத்தினசாமி கதறி துடித்தார். அந்த பகுதி மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் திருஞானம், தரமணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். பாண்டியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
பாண்டியம்மாள் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 5 ஆயிரம் ரூபாய் கொள்ளைப் போய் உள்ளது. பாண்டியம்மாள் வீட்டின் உரிமையாளர் அன்பழகன் (48). இவரது வீடு அருகில் உள்ளது. கார்பென்டரான அன்பழகன், குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு இன்று காலை தான் வீடு திரும்பினார். அவரது வீடும் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அன்பழகன் வீட்டில் நடந்த கொள்ளையை பார்த்து பாண்டியம்மாள் சத்தம் போட்டதால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீ சார் சந்தேகிக்கின்றனர். பீரோ, கதவில் கைரேகை பதியாமல் இருக்க கொள்ளையர்கள் கையுறை அணிந்து வந்துள்ளனர். மோப்ப பிடிக்க முடியாமல் இருக்க வீட்டின் வாசலில் மிளகாய் பொடியை கொள்ளையர்கள் தூவி விட்டு சென்றுள்ளனர். மோப்ப நாய் தாஸ் வந்து, பாண்டியம்மாள் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தப்படி தரமணி 100 அடி ரோட்டில் வந்து நின்று விட்டது. எனவே, கொலைகாரர்கள் இந்த வழியாக தப்பியிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். தரமணியில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.