சென்னை: ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி டி-5 ராக்கெட், நாளை மாலை 4.50 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுன்ட் டவுன் இன்று காலை 11.50 மணிக்கு தொடங்கியது. இந்த ராக்கெட்டில் ஜி-சாட்14 என்ற தொலை தொடர்பு செயற்கை கோள் பொருத்தப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கிருந்து இதுவரை 104 ராக்கெட்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இவற்றில் பிஎஸ்எல்வி வகையை சேர்ந்த ராக்கெட்கள் பெருமளவு வெற்றி பெற்றுள்ளன. ஜிஎஸ்எல்வி வகையை சேர்ந்த ராக்கெட்கள் 7 ஏவப்பட்டுள்ளன. இதில் 4 மட்டுமே வெற்றிகரமாக பறந்தன. ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்களில் கிரையோஜெனிக் இன்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கான தொழில்நுட்பங்களை இஸ்ரோ நிறுவனம், ரஷ்யாவில் இருந்து பெற்று ராக்கெட்களை ஏவி வந்தது. ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த நிலையில் அவற்றில் பயன்படுத்தப்படும் இன்ஜின் திறன் மேம்பாடு செய்யப்படும் என்று கடந்த மாதத்தில் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அதன் அடிப்படையில் முழுக்க முழுக்க மேம்பாடு செய்யப்பட்டு, இந்திய தொழில்நுட்பத்தில் கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி டி-5 ராக்கெட், நாளை மாலை 4.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 29 மணி நேர கவுன்ட் டவுன் இன்று காலை 11.50 மணிக்கு தொடங்கியது. ஜிஎஸ்எல்வி டி-5 ராக்கெட் மூலம் ஜி-சாட் 14 என்ற தகவல் தொடர்பு செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த செயற்கை கோள், 2004-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட எஜூசாட் செயற்கை கோளுக்கு மாற்றாக விளங்கும். எஜூசாட்டின் பணிக்காலம் சில மாதங்களில் முடிவடைய உள்ளது. எனவே, அதற்கு மாற்றாக தற்போது ஜி-சாட் 14 விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த செயற்கை கோளில் தகவல் தொடர்புகளை அளிக்கும் வகையில் 6 கே.யு. டிரான்ஸ்பாண்டர்கள், 6 இ.எக்ஸ்.டி, சி பாண்டு டிரான்ஸ்பாண்டர்கள், கே.ஏ. பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவது குறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘கிரையோஜெனிக் இன்ஜின்கள் குறித்து முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, புதிதாக தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் செயற்கை கோள் பொருத்தப்பட்டு, ஏவும் நிலையில் ஜிஎஸ்எல்வி டி-5 நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான 35 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மின் பணிகள் நிறைவடைந்துள்ளன. முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பு இன்ஜினாக ஜிஎஸ்எல்வி டி-5 விளங்குகிறது. இது வெற்றிகரமாக ஏவப்படும்’’ என்றார்.