இறால்கள் சிக்காததால் நஷ்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை 400 படகுகள் நிறுத்தம்
மணமேல்குடி:புதுக்கோட்டை மாவட் டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் விசைப்படகு துறைமுகங்களில் 600 விசைப்படகுகளில், 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மாவட்ட கடல் பகுதியில் இறால் மீன்கள் வரத்து குறைவாக உள்ளதால் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கடந்த 9ம் தேதி முதல் கடலுக்கு செல்லாமல் இருந்து வருகின்றனர். இதேபோல் ஜெகதாபட்டினம் மீனவர்களும் இன்று முதல் கடலுக்குச் செல்லவில்லை.
கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினத்தில் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர்கள் சின்னஅடைக்கலம், குட்டியாண்டி ஆகியோர் கூறுகையில், ‘மாதம் ஒன்றுக்கு மீனவர்கள் 12 முறை கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர். தமிழக அரசு மாதம் ஒன்றுக்கு வழங்கும் மானிய டீசல் 1500 லிட்டர் மூலம் 6 முறை மட்டுமே கடலுக்கு சென்று வர முடியும். மற்ற நேரங்களில் அதிக விலை கொடுத்து வெளியில் டீசல் வாங்கி கடலுக்கு செல்கிறோம். நாள்தோறும் ஒரு படகுக்கு ரூ.1500 முதல் ரூ.2,500 வரை நஷ்டம் ஏற்படுகிறது. கடலில் இறால் மீன்களின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
மீனவர்கள், மீனவ தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ.1 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. நஷ்டம் ஏற்படுவதால் கடலுக்கு செல்வதை நிறுத்தி வைத்துள்ளோம். மீனவர்களுக்கு உதவ அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்‘ என்றனர்.